திருநெல்வேலி

தொடுவானம் என்ற பெயரில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில், "தொடுவானம் என்ற பெயரில் நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தக் கூடாது. 

பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். 

பிளஸ்-1 வகுப்புகளுக்குரிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டோர் மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும். 

மே மாத கோடை விடுமுறையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நாள்களுக்கு இணையாக ஈட்டிய விடுப்பு முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

1-6-2009-ஆம் தேதிக்கு பின்பு பணியில் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். 

வீரவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு முதுநிலை ஆசிரியரின் நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர அனுமதி வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 27) கொக்கிரகுளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.