ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்

திமுகவில் உள்ள பல்வேறு அணிகளில் மிகவும் முக்கியமானது இளைஞரணி. அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் வசம் பல ஆண்டுகளாக வைத்திருந்த பொறுப்பு அது. தற்போது அந்த பொறுப்பு அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைனஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதில் இருந்தே இளைஞரணியின் பணிகள் வேகமெடுத்துள்ளன. கிளைக் கழக அளவிலும், வட்ட/வார்டு அளவிலும் இளைஞர் அணி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தொகுதி தோறும் ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இல்லம்தோறும் சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு வாங்க; மணிப்பூர் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
இதனிடையே, பொதுக்குழுவில் அனைத்து அணிகளும் சிறப்பாகச் செயலாற்றிட வேண்டும் எனவும், அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இளைஞர் அணிக்கான மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 72 கழக மாவட்டங்களிலிருந்தும் 4,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, இளைஞர் அணியில் உள்ள 9 மண்டலங்கள் வாரியாக நேர்காணலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இறுதியாக, விண்ணப்பித்த 4,158 நபர்களிலிருந்து 609 பேர் தேர்வு செய்யப்பட்டு, இளைஞர் அணியின் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதையடுத்து, முதல்முறையாக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 29ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.