திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் உள்ள வி.மேட்டுப்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் குதியானவர்களின் பட்டியலை ஒட்டாமல் அலுவர் சென்றதால், கூட்டுறவு சங்க செயலரை வங்கிக்குள் வைத்து திமுக-வினர் பூட்டினர்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 2–ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. 

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 486 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 137 சங்கங்களுக்கு அடுத்த மாதம் 2–ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 2624 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், இயக்குனர்களை தேர்வு செய்வதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களின் பட்டியல் நேற்று மாலை ஒட்டப்பட்டது.

இதில், வி.மேட்டுப்பட்டி கூட்டுறவு வங்கியில் தேர்தல் நடத்தும் அலுவலர், பட்டியலை வெளியிடாமல் பிற்பகலில் வங்கியை விட்டு சென்றுவிட்டாராம். 

இதனைக் கண்டித்து சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன் தலைமையிலான அந்த கட்சியினர் விளக்கம் கேட்பதற்காக கூட்டுறவு வங்கிக்கு சென்றனர். ஆனால், அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இல்லாததால், செயலர் சுப்பிரமணியை வங்கிக்குள் வைத்து பூட்டி விட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். 

பின்னர் அவர்கள், வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சாணார்பட்டி உதவி ஆய்வாளர் அபுதல்கா தலைமையிலான காவலாளர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி செயலரை மீட்டனர். கூட்டுறவு வங்கிக்குள் வைத்து செயலரை பூட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.