மதச்சார்பின்மைக்கு குந்தகம்: பொது சிவில் சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு!
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்

நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு உத்தேசித்துள்ளது. மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புதான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது.
பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு இடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. அதன்படி, சட்ட ஆணையத்துக்கு தங்களது கருத்துக்களை பலரும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது; தமிழ்நாட்டில் மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்; பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொது சிவில் சட்டத்துக்கு அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை வலியுறித்தி பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. எதிர்வரவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.