சேலத்தில் கச்சிராப்பாளையம் ஏரியை பார்வையிட வந்த திமுகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள கச்சிராப்பாளையம் ஏரியில் விவசாயிகள், ஒரு மாதகாலத்துக்கு முன்பு தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்குப் பின்னர், திமுக மற்றும் அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு ஏரியை தூர் வாரி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரி தூர்வாரும் பணிகளை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏரி பகுதியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த திமுகவினரை, ஏரிப்பகுதிக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கச்சிராப்பாளையம் ஏரியில் தூர் வாரி விட்டதாகவும் திமுகவினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, சங்ககிரி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது திமுகவினருடன் சங்ககிரி கோட்டாட்சியர் ராமதுரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

கச்சிராப்பாளையம் ஏரியை முறையாக தூர்வாரும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.