தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என கூறியுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும், இவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் போராடமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி துவங்கவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு மற்ற ஊர்களில் இருந்து 9,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 12,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும் பிற ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், கே.கே.நகர்., மாதவரம் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.

 

தற்காலிகமாக 5 பேருந்து நிலையங்கள்....

கோயம்பேடு: வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

மாதவரம்: செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கே.கே.நகர்: கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் பணிமனை (சின்னமலை) எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்: விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி: ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத் தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.