district magistrate review in arani farming land
ஆரணி அருகே துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம் முன்னிலையில் நெற்பயிரை டிராக்டரை ஓட்டி சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள காமக்கூர் கிராமத்தில் நன்கு வளர்ந்த நெற்பயிர்களை காவல் துறையினர் முன்னிலையில் டிராக்டர் மூலம் சேதப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணின் விவசாய நிலம் தொடர்பாக அவர்கள் குடும்பத்துக்குள் பிரச்னை இருந்துவருகிறது. இந்நிலையில், அவர்கள் குடும்பத்தின் ஒரு பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், நெற்பயிர் வளர்ந்த விவசாய நிலத்தை இரக்கமின்றி டிராக்டரை விட்டு உழுக செய்ததாக பாதிக்கப்பட்ட சாவித்திரி என்ற பெண் புகார் கூறுயிருக்கிறார்.
நெற்பயிரை டிராக்டரை விட்டு போலீஸ் டி.எஸ்.பி-யே உழுக செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் எதிரொலியாக இந்த விவகாரம் குறித்து மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான நீதிபதி மகிழேந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த இளைஞருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதியிடம் சாவித்திரி கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பிரச்சினை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி ஜெரினா பேகம் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
டிராக்டரை ஓட்டிய சதாசிவம் மற்றும் நில உரிமை கோரும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவர் தலைமறைவாகியுள்ளனர். முன்னரே டி.எஸ்.பி ஜெரினா பேகம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
