District Collector Govindaraj advised student! Do not do this anymore!

தலைமை ஆசிரியர் அடித்ததால், மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் கரூரில் நடந்துள்ளது. தற்கொலை முயற்சி செய்யக்கூடாது; மனத்திடத்தை வளர்த்துக்கணும் என்று மாணவனுக்கு ஆட்சியர் அறிவுரை கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் ஜோதிவடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பிரகாஷ், உப்பிடமங்கலம் அரசு மேல்நிலை 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவன் பிரகாஷ், திடீரென அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தோர், மாணவன் பிரகாஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில், பிரகாஷுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அரளி விதை அரைத்து குடித்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டது குறித்து மாணவன் பிரகாஷ், கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். அதில், நான் பண்ணாத தப்புக்கு என்னை தலைமை ஆசிரியர் அடித்து விட்டார். படித்துக் கொண்டிருந்த என்னை தேவையில்லாமல் அடித்து விட்டார். ஒரு தவறும் செய்யாதபோதும் அடித்ததற்கு அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். என் உயிருக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்று அதில் எழுதியிருந்தது.

மாணவன் தற்கொலை முயற்சி குறித்து அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரகாஷை பார்க்க சென்றனர். அப்போது பழங்களையும் உடன் எடுத்துச் சென்று நலம் விசாரித்தார்.

மாணவனிடம், ஏன் இப்படி செய்தாய்? என்று ஆட்சியர் கேட்டதற்கு, நான் தப்பே பண்ணல. ஆனால் தலைமை ஆசிரியர் என்னை அடிச்சுட்டார். அவர் மீது நடவடிக்கை எடுங்க சார் என்று கூறியிருக்கிறான்.

அதற்கு ஆட்சியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் நீ இனிமேல் தற்கொலைக்கு முயலக் கூடாது. சவால்களை, பிரச்சனைகளை காலம் முழுக்க எதிர்கொள்ளணும். அதில், சிறிய விஷயத்துக்கே இப்படி தற்கொலை முயற்சி வரை போகக்கூடாது. மனத்திடத்தை வளர்த்துக்கணும் என்று கூறியுள்ளார். அதற்கு பிரகாஷ், கண்டிப்பா என்ன நடந்தாலும் இனிமேல் இதுபோல் தவறான முடிவு எடுக்க மாட்டேன் சார் என்றதற்கு சபாஷ் என்று கூறி ஆட்சியரும், அதிகாரிகளும் அங்கிருந்து புறப்பட்டனர்.