அரியலூர்,

அரியலூரில், பேருந்து நுழைவு வாயிலில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில் கலைஞரின் பெயர் விசமிகளால் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் பேருந்து நிலைய பிரதான நுழைவு வாயிலில், “டாக்டர் கலைஞர் நுழைவுவாயில்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் “கலைஞர்” என்ற வார்த்தை மட்டும் அந்த நுழைவு வாயிலில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. இது அரியலூர் தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் பேருந்து நிலைய பகுதியில் காவலாளர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தி.மு.க. நகர செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், அரியலூர் நுழைவு வாயிலில் எழுதப்பட்டிருந்த கலைஞர் என்ற வார்த்தையை பெயர்த்தெடுத்து சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அனில்குமார் கிரியிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை கிளப்பியுள்ளது.