பெரம்பலூர் 

பெரம்பலூரில், காவல்துறையினர் அவமதிப்பதாகவும், அநாகரீகமாக பேசுவதாகவும் கூறி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைத் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர், வழக்குரைஞர்களை அவமதித்ததாகவும், வழக்குத் தொடர்பாக காவல் நிலையம் செல்லும் வழக்குரைஞர்களிடம் அநாகரீகமாக பேசுவதாகவும் கூறி வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிச்சை ஆகியோர் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர். 

வழக்குரைஞர்களின் இந்தப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.

அதனால், நீதிமன்ற வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர் தலைமையில், காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஞான.சிவக்குமார் மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், சுமூக முடிவு காணப்படாததால் சமரச பேச்சுவார்த்தையை வரும் திங்கள்கிழமை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.