Dindigul has more than 28 thousand 358 female voters than male voters
உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிப் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்களைவிட, 28 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், செப்டம்பர் 20–ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19–ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 5–ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து, புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்டம் வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி நேற்று திண்டுக்கல் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி.வினய் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரபாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த பட்டியலின்படி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 8 இலட்சத்து 56 ஆயிரத்து 868 ஆண் வாக்காளர்கள், 8 இலட்சத்து 85 ஆயிரத்து 226 பெண் வாக்காளர்கள், 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 17 இலட்சத்து 42 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்களைவிட, 28 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.
