முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கட்டுரை தொடர்பாக செய்தி நாளிதழின் ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, நிரம்பி வழியும் கக்கூஸ் என்ற தலைப்பில் முதல்பக்க பேனர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த செய்தி நிறுவனத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கட்டுரை தொடர்பாக தினமலர் சென்னை, மதுரை பதிப்பக ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு- சேலம் 'தினமலர்' பதிப்பில் இன்று (ஆக.,31) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க, வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும், கி.ராமசுப்புவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.” என கூறப்பட்டுள்ளது.

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா? பின்னணி என்ன?

மேலும், “ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது, சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த, 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு - சேலம் தினமலர் பதிப்பினையும், அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். வழக்கு நிலுவையில் இருப்பதால் தினமலர் நாளிதழ் பெயர் ஒன்றாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு- சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.” எனவும் சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளின் தினமலர் ஆசிரியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி, முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் கீழ், உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனிடையே, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தினை முதல்வர் ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.