dinakaran to appear court by Forex Fraud Case

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ஏப்ரல் 10 ஆம் தேதி டி.டி.வி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும், அதுவே அவருக்கு இறுதி வாய்ப்பு எனவும் நீதிபதி மலர்மதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.

இது தொடர்பாக ஏழு வழக்குகள் தினகரன் மீது பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து தினகரனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுகுறித்த வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. மேலும், அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி மலர்மதி தினகரன் தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்தார்.

மேலும் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனவும், தினகரன் தொடர்ந்து ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அதனால் வழக்கு விசாரணையை நீதிமன்றம் இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. ஆனால் இன்றும் தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதற்கு நீதிபதி மலர்மதி கடும் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து வழக்கில் தினகரன் ஆஜராகாமல் இருப்பது கண்டனத்திற்குரியது எனவும், ஏப்ரல் 10 ஆம் தேதி டி.டி.வி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும், அதுவே அவருக்கு இறுதி வாய்ப்பு எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.