அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக 10 பேராசிரியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களதுவிடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.700 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அந்த 700 ரூபாயில் ரூ.300விடைத்தாள் போட்டோ காப்பிக்கும் ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

 

ரூ.700 பணம் கட்டி விண்ணப்பித்ததும், அந்த பாடத்துக்குரிய நிபுணர், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். மதிப்பெண்மறுமதிப்பீட்டுக்கு அந்த விடைத்தாள் உகந்ததா? என்று ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்டகல்லூரிகள் மூலம் மறுமதிப்பீடு நடக்கும் மையம் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் 23 மையங்களில் மறுமதிப்பீடு பணிநடக்கும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரடியாக இதற்கான அதிகாரிகள் மற்றும் மறு மதிப்பீடுசெய்பவர்களை முடிவு செய்து நியமிப்பார். மறுமதிப்பீட்டின் போது ஏற்கனவே எடுத்த மதிப்பெண்களை விட குறைவானமதிப்பெண் வந்தால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

மறுமதிப்பீடு செய்த பிறகு ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணை விட 15 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றால்,மேலும் ஒரு நபரிடம் மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும். அவர்கள் இருவரில் யார் அதிக மதிப்பெண் அளித்துள்ளாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், பேராசிரியர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு மூலம்,  அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்துள்ளனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் தேர்வுகள் எழுதிய மாணவர்கள், விடைத்தாள் மறுமதிப்பீட்டு கோரி விண்ணப்பித்திருந்தனர். மறுமதிப்பீடு செய்து வெளிவந்த தேர்வு முடிவுகளில், பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணா பல்கலை முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார், மற்றும் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.