திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் ரூ.25 செலுத்தி, வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெறும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.