காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவந்த தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது போலவே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 7 இடங்களில் மார்ச் 12-ஆம் தேதி முதல் தூர்தர்ஷன் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என்று தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தின் துணை இயக்குநர் அறிவித்துள்ளார். 

வேலூர், தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தின் துணை இயக்குநர் (பொறியியல்) சின்னசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின் படி, திருவண்ணாலை, வேலூர் மாவட்டங்களில் செயல்பட்டுவந்த தூர்தர்ஷன் அஞ்சல் நிலையங்களான, ஆரணி (189.25 மெகாஹெர்ட்ஸ்), செய்யாறு (535.25 மெகா ஹெர்ட்ஸ்), வந்தவாசி (210.25 மெகா ஹெர்ட்ஸ்), ஆற்காடு (519.25 மெகாஹெர்ட்ஸ்), 

பேரணாம்பட்டு (527.24 மெகா ஹெர்ட்ஸ்), வேலூர் (471.25 மெகாஹெர்ட்ஸ்) மற்றும் வேலூர் தூர்தர்ஷன் செய்தி அஞ்சல் நிலையம் (503.25 மெகாஹெர்ட்ஸ்) ஆகிய 7 இடங்களில் செயல்பட்டு வந்த குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களின் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளது. 

மேலும், நாடு முழுவதும் தூர்தர்ஷன் அஞ்சல் நிலைய சேவைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதனையொட்டி, அனலாக் முறைப்படி செயல்பட்டு வரும் குறைந்த சக்தி கொண்ட தூர்தர்ஷன் அஞ்சல் நிலையங்களின் சேவைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு வருகின்றன. 

அண்மையில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவந்த குறைந்த சக்தி கொண்ட தூர்தர்ஷன் ஒளிபரப்பு மைய சேவையும் இதே காரணத்தால்தான் நிறுத்தப்பட்டது. அதன்படி, தூர்தர்ஷன் தேசிய, மண்டல, செய்தி ஒளிபரப்பு சேவைகள் வரும் மார்ச் 12-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது. 

இருப்பினும், தூர்தர்ஷனின் அனைத்துச் சேனல்களும் டிடி ஃப்ரீ, டிஷ்-டிடிஹெச், செட் டாப் பாக்ஸ் மூலம் கட்டணமின்றி கிடைக்கும்” என்பதை தூர்தர்ஷன் நேயர்களுக்குத் தெரிவித்தார் அதன் துணை இயக்குநர்.