இரும்புத் தாதுகளை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எட்டு வழிச் சாலை என அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

கண்டன உரையாற்றிய தினகரன், “எடப்பாடி தனது சுயநலத்திற்காக மத்திய அரசிடம் கேட்ட திட்டம்தான் இந்த எட்டு வழிச் சாலைத் திட்டம். 2017 நவம்பரில் தமிழகத்திற்காக மத்திய தரை வழி போக்குவரத்துத் துறையிடம் நிதி கேட்ட எந்தத் திட்டத்திலும் இந்த எட்டு வழிச் சாலை இல்லை.

ஆனால் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தரை வழிப் போக்குவரத்துத் துறைக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்புகிறார். அடுத்த நாளே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவோம் என்று கூறுகிறார். 10 ஆயிரம் கோடி நிதியும் உடனே ஒதுக்கித் தரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“எட்டு வழிச் சாலையை பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு அமைக்கட்டும். தமிழகத்துக்கு எட்டு வழிச் சாலை தேவையில்லை என்பதுதான் தமிழக மக்களின் கருத்து. தமிழகத்துக்கு எட்டு வழிச் சாலை வர வேண்டும் என்று அவசர அவசரமாக எடப்பாடி பகீரத முயற்சி எடுப்பதற்குக் காரணம் என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கல்வராயன் மலை, கஞ்சமலை, கவுத்திமலை உள்ளிட்ட மலைகளிலுள்ள இரும்புத் தாதுகளை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எட்டு வழிச் சாலை. மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் ஆட்சி இருக்காது என்பதுதான் உண்மை” என்றும் தெரிவித்தார்.