திருச்சி 

திருச்சியில் ஆட்சியரகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு கேட்டு தரையில்  உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சங்கரநாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடங்கியதும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் முன் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு  அதன் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

திடீரென நடந்த இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில், "இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும், 

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பெருவளை, பங்குனி, ஐயன், தெற்கு, உய்யகொண்டான் உள்ளிட்ட வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ் முறைகேடு இல்லாமல் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கோரி அவர்கள் முழக்கமிட்டனர். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றனர்.