காசு, பணம், சொத்து எதுவும் வேண்டாம். கொள்ளி வைக்க பிள்ளை போதும் என்று நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறி வரும் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் தாய் தந்தை நாங்கள்தான் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் பல்வேறு வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கதிரேசன் - மீனாட்சியி இருவரும், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் எங்களுக்கு காசு, பணம், சொத்து எதுவும் வேண்டாம் என்றும் கொள்ளி வைக்க பிள்ளை போதும் என்றும் கோரி உள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்த பின்னர் கதிரேசன், செய்தியாளர்களிடம் பேசினார். எங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ். இதற்காக மதுரை மாவட்டம் மேலூர் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு நடைபெற்று வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா ஆகியோர் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக எங்கள் மகன் தனுஷை எங்களிடம் இருந்து பிரித்து விட்டனர்.

எங்களுக்கு காசு, பணம், சொத்து எதுவும் வேண்டாம். நாங்கள் பாசத்துக்காகவே கேட்கிறோம். பணத்துக்காக அல்ல. எங்களை ஒருமுறை வந்து பார்த்தால் மட்டும் போதும். எங்களின் இறுதி காலத்தில் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளுக்காக மட்டும் அவர் செய்தால் போதும். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக கதிரேசன் கூறினார்.