டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது சரியே என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த குடோனுக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், குட்கா பொருட்களை தமிழகம் முழுவதும் சப்ளை செய்ய சுகாதார துறை அமைச்சர், சென்னை மாநகர கமிஷனர், தமிழக டிஜிபி ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக, அதன் உரிமையாளர்கள் வாக்குமூலம் அளித்தனர் என வருமான வரித்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சட்டமன்ற கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஏற்கனவே புகார் கூறப்பட்ட டிஜிபி ராஜேந்திரன் பணி காலம் முடிந்தது. ஆனால், அவரே மீண்டும் பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட ஏஐடியுசி செயலர் கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:-
சென்னை, 'குட்கா' உற்பத்தி நிறுவனங்களிடம், 2016ல் வருமான வரித்துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவற்றில், மாநில அமைச்சர் மற்றும் சென்னையை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இருந்தன.
இவ்விவகாரம் தொடர்பாக, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, டி.கே.ராஜேந்திரன் மீதும் புகார் எழுந்துள்ளது.பதவி நீட்டிப்பு உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். 'குட்கா' வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் உள்ள புகாரை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், வருமான வரித்துறை தலைமை கமிஷனர் சார்பில் விளக்கம் கேட்டு, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து மேற்கண்ட துறை அதிகாரிகள் சார்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது,டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு சரியே. புகார் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு போதிய முகாந்திரம் இல்லை. இந்த புகார் குறித்து குழு அமைத்து எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.