தேவர் சிலை இருக்கும் இடத்திற்கு செல்ல, எங்கள் சமூகத்தினரிடம் நீங்கள் அனுமதி வாங்கனும் – திருப்பி அனுப்பப்பட்ட எம்.எல்.ஏ
தேனி மாவட்டத்தில் “எங்களுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கும் தேவர் மற்றும் வேலுநாச்சியார் சிலையை எங்கள் சமூக நிர்வாகிகளின் அனுமதியின்றி நீங்கள் உள்ளேச் சென்று ஆய்வு செய்யக் கூடாது” என்று அப்பகுதி இளைஞர்கள், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ-வை திருப்பி அனுப்பினர்.
சின்னமனூர் கருங்கட்டான்குளப் பகுதியில் பழைய பாளையம் சாலையில், சில ஆண்டுகளுக்கு முன் தேவர் சிலை மற்றும் வேலுநாச்சியார் சிலை நிறுவப்பட்டன. ஆனால், சிலை வைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி தர மறுத்ததால், சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
பின்னர், அந்த இரு சிலைகளும் அச்சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட கோயில் வளாகத்தில் மூடி வைக்கப்பட்டன.
தேவர் குருபூஜை உள்ளிட்ட விசேஷங்களின்போது, காவலாளர்களின் அனுமதியுடன் மூடப்பட்டச் சிலையைத் திறந்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், உத்தமபாளையம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சின்னமனூர் முன்னாள் நகரத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் அச்சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யச் சென்று இருந்தனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், “எங்களுக்குச் சொந்தமான இடத்திலுள்ள சிலையை எங்கள் சமூக நிர்வாகிகளின் அனுமதியின்றி உள்ளே சென்று ஆய்வு செய்யக் கூடாது” என்று பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்டு நீங்கள் உள்ளேப் போகக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.