Detainees who have been in prison for more than ten years should be released immediately - Jawhirullahl emphasis ...

கோயம்புத்தூர்

பத்து வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை மன்னித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கேட்டு கொண்டார்.

கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாட்ஷா, அன்சாரி உள்பட பலர் ஆயுள் தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

எனவே, பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்த ரிஸ்வான் பாட்ஷா என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். 

இதனையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று காலை கோயம்புத்தூர் வந்தார். அவர் அந்தக் கட்சியின் நிர்வாகிகளு டன் கோயம்புத்தூர் மத்திய சிறைக்குச் சென்றார். அங்கு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பாட்ஷா, அன்சாரி உள்பட பலரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் சிறையைவிட்டு வெளியே வந்த ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியது: "ஆயுள் தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும் கைதிகளையும், சிறை கண்காணிப்பாளரையும் சந்தித்து பேசினேன். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தன்னை விடுதலை செய்து விடுவார்கள் என்று ரிஷ்வான் பாட்ஷா நினைத்தார். ஆனால், விடுதலை செய்யவில்லை. அந்த மன அழுத்தத்தில்தான் அவர் இறந்துள்ளார். 

எனவே, அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், மாநில அரசு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஆயுள் தண்டனை பெற்று பத்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை மன்னித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களை எந்த விதத்திலும் பழிவாங்கக் கூடாது" என்று அவர் கூறினார்.