புழல் மத்திய சிறைச்சாலையின் விசாரணை சிறையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு உயர் பாதுகாப்பு அறை, குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட கைதிகள் அறை, கொலை மற்றும் சிறைக் கைதிகளுக்கு தனியறை உள்ளன.

இதில், உயர் பாதுகாப்பு அறைக்குள் 12 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள், அம்பத்தூர் தொழிற்பேட்டை இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, இங்கு அடைக்கப்பட்டள்ளனர்.

இவர்களை பார்க்க வரும் உறவினர் மற்றும் நண்பர்களை எவ்வித நிபந்தனை இல்லாமல் நேரடியாக பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களை சாதாரண கைதி அறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டபடி நடக்க முடியும் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த முகமது தமீம், முகமது திப்பு உள்பட 12 கைதிகள் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் சிறைக்குள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.