தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இது வரை 35 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தின்  அனைத்துப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இது வரை டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலியாகியிள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் டெங்கு குறித்து பொது மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும், டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.