தருமபுரி

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பணி வழங்க வேண்டும் என்று தர்மபுரயில் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் அசோக், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், அருண்குமார், மாவட்ட இணை செயலாளர்கள் சுமதி, முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, துணைத்தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் எந்த வித நிபந்தனையும் இன்றி பணி வழங்க வேண்டும். 

மாற்றுத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் புதுவாழ்வு திட்டத்தில் பணி வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

இதில் சங்க நிர்வாகிகள் அங்குராஜ், மோகன்குமார், ரூத்பிரிசில்லா கிரிஸ்டி, ராஜீவ்காந்தி, சிவக்குமார் உள்பட நிர்வாகிகள், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அருள்செல்வன் நன்றி தெரிவித்தார்.