demonstration in colector office condemning collector

திருவண்ணாமலை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகத்திலேயே துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தன்னை திட்டுவதை ஆட்சியரே கூட்டத்தில் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து தன்பக்க நியாயத்தை கூற வாய்ப்பு கேட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நேற்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஜோதிசங்கர் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி, மாநில வருவாய்த்துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பார்த்திபன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட பிரதிநிதிகள் ஆட்சியரைக் கண்டித்துப் பேசினர்.

அப்போது அவர்கள், "ஆய்வுக் கூட்டங்களில் ஆட்சியர் கடுஞ்சொற்களால் ஊழியர்களை வசைபாடுகிறார்" போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வைத்தனர்.

அந்த சமயத்தில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று, ஆர்ப்பாட்டத்தில் பேசப்படுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆட்சியரை பார்த்ததும் கண்டித்தப் பேசியவர்கள், "ஆட்சியராக இருந்துகொண்டு கடுஞ்சொற்களை பயன்படுத்தலாமா? என்று கேள்வி கேட்டனர்.

அப்போது ஆட்சியர், அவர்களிடம் சென்று தன்னை சில நிமிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்றுக் கேட்டார். அதைத்தொடர்ந்து ஆட்சியருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஆட்சியர், "நான் எந்த பெண்ணையும் தரக்குறைவாக பேசவில்லை. அப்படி பேசி இருக்கவும் மாட்டேன். சிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிகாட்டி இருப்பேன்.

திருவண்ணாமலைக்கு நான் ஆட்சியராக பெறுப்பேற்ற நாளில் இருந்து, இந்த மாவட்டத்தின் குடிமகனாகதான் செயல்பட்டு வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தை சுகாதாரத்தில் முதல் மாவட்டமாக கொண்டு வந்துள்ளேன். இதனை நான் செய்யவில்லை. உங்களால் தான் செய்ய முடிந்தது என்றார்.

அந்த சமயத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் குறுக்கிட்டு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தான் கூறினோம். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆட்சியரை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

அப்போது, ஆட்சியர் எனக்கு பேச அனுமதி வழங்குங்கள் என்று தொடர்ந்து கேட்டுல் கொண்டிருந்தார். இதனையடுத்து ஆட்சியர், ஆர்ப்பாட்டத்தில் குளறுபடி செய்கிறார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

"ஆர்ப்பாட்டத்தை நடத்த விடுங்கள் அல்லது எங்களை கைது செய்யுங்கள்" என்று முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து ஆட்சியர் தனது அறைக்கு சென்றுவிட்டார்.

பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம், "நேரில் சென்று நான் எனது கருத்துகளை சொன்னேன். ஆதாரமற்ற சில கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் மீது கொச்சைப்படுத்தி கூறினர். எனது தரப்பு நியாயத்தை அவர்களிடம் தெரிவிக்க அனுமதி கேட்டேன். பின்னர் நான் பேச ஆரம்பித்தேன். அப்போது அவர்கள் அதனை திசைத் திருப்பி விட்டனர். சில குறிப்பிட்ட நபர்கள், அவர்களின் ஆதாயத்திற்காக அரசு ஊழியர்களை திருப்பிவிட்டு வருகின்றனர்’ என்றார்.