Demonstration by Village Administrative Officers in Thiruvarur condemning collector
திருவாரூர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டப் பொருளாளர் எஸ்.ராஜாராம் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் வி.ராஜசேகரன், வட்டத் தலைவர் ஜி.அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு வி.ராஜசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சிவகங்கை மாவட்டத்தில் எந்தக் குற்றமும் செய்யாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பயிர்க் காப்பீட்டுக்கு வழங்கிய அடங்கலில், விஸ்தீரணம் வித்தியாசமாக உள்ளது என்று தவறான தகவலின் அடிப்படையில் குறிப்பாணைகள் வழங்கிய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இதுவரை மூன்றுகட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
இதுகுறித்து இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய தகுதிகாண் பருவ ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. மாவட்ட மாறுதல் பெற்றவர்களை விடுவிக்கவும் இல்லை. எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்" என்று அவர் தெரிவித்தார்.
