சேலம்

பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரி சேலத்தில் சமூக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்புச் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் சமூக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்புச் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தபப்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஊர்வலத்திற்கு காவலாளர்கள் அனுமதி தரவில்லை இருந்தும் நேற்று காலை கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு திரண்டனர்.

அவர்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலர் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தின் போது மாணவ, மாணவிகள் பலர், ‘கொண்டு வா கொண்டு வா கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வா, நசுக்காதே நசுக்காதே மாநில உரிமைகளை நசுக்காதே‘, ‘ரத்து செய் ரத்து செய் மத்திய, மாநில அரசே ‘நீட்’ தேர்வை ரத்து செய்‘, ‘நீதி வேண்டும் நீதி வேண்டும் மாணவி அனிதாவுக்கு நீதி வேண்டும்’ என்ற முழங்கிக் கொண்டே சென்றனர்.

இந்த ஊர்வலம் செரி சாலை, திருவள்ளுவர் சிலை வழியாக தலைமைத் தபால் நிலையம் முன்பு சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.