கிருஷ்ணகிரி அருகே சீராக குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், குடிநீருக்காக பெண்கள் நீண்ட தொலைவு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும்,
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுடன் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாரசந்திரம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.