புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை மிரட்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:- தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி கூடுதல் வலுப்பெறும் என்பதால் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20, 21-ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

 

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், 7 செ.மீ., கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.