தேனி அருகே என்ஜினீயர் ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில்  டாக்டர்கள் நச்சுக்கொடியை அகற்றுவதற்கு மாமனார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கண்ணன் என்ற  என்ஜினீயர் எலக்ட்ரீக்கல் வேலையை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி எம்.பி.ஏ. பட்டதாரி. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மகாலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கணவன், மனைவி இருவரும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்பினர். கடந்த வாரம் இவருக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் தேதி குறித்து கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட நாளில் குழந்தை பிறக்கவில்லை.

தொடர்ந்து மகாலட்சுமி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்தார். இதை அறிந்த கண்ணனின் தந்தை தனுஷ்கோடி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரும், மருத்துவத்துறை அதிகாரிகளும் கண்ணனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் பிடிவாதமாக தனது மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவமே பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன் தனது வீட்டில் வைத்தே மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இரவு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அவர் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளதாக போலீசாருக்கும், மருத்துவத்துறைக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து 2 ஆம்புலன்சுகளுடன் மருத்துவத்துறையினர் அங்கு சென்று நச்சுக் கொடியை அகற்ற வேண்டும் என்றும், குழந்தையின் உடல் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு கணவன்-மனைவி இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணன், அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர்  நச்சுக் கொடியை அகற்றவிடாமல் தடுத்தனர்.

நீண்ட பேச்சுவார்க்குப் பின்னர் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த பரிசோதனையும் செய்யக்கூடாது என்றும், சித்த மருத்துவர்கள் வந்தால் மட்டுமே குழந்தையை பரிசோதனை செய்ய அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவக்குழுவினர் அங்கு வந்து குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, நச்சுக் கொடியை பாதுகாப்பாக அகற்றினர்.

இதையடுத்து டாக்டர்களி பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி கண்ணணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த போது பெண் ஒருவர் மரணமடைந்தார். தற்போது இதே போன்று தேனியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.