delhi police reveals info about jnu suicide

சேலம் மாணவன் முத்து கிருஷ்ணன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்து வந்தார். நேற்று மாலை அவர், தூக்கில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், டெல்லி புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக, தனது மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது. அவனது சாவில் மர்மம் உள்ளது என முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், சொந்த ஊர் திரும்புவதாக கடந்த சில நாட்களுக்கு முன் முத்து கிருஷ்ணன் கூறியுள்ளார். அதற்குள் அவர், மர்மமாக இறந்தது வேதனை அளிக்கிறது. அவரது சாவில் மர்மம் உள்ளது என்றார். இதற்கிடையில், சேலம் அரிசிபாளையம் பகுதியில், முத்து கிருஷ்ணன் சாவில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறியதாவது.

மாணவன் முத்துகிருஷ்ணன், பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டே ஓட்டலில் வேலை செய்தார். அவருக்கு வேலை பளு காரணமா, கல்லூரி படிப்பில் பிரச்சனையா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அவரது செல்போனில் உள்ள எண்களும், அதில் வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறோம். முத்து கிருஷ்ணன், தற்கொலை செய்வதற்கு முன் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை.

முத்து கிருஷ்ணன் தூக்கில் சடலமாக இருந்ததை, மணிப்பூர் மாணவர் முதலில் பார்த்துள்ளார். அவரிடமும், சக மாணவர்களிடம் விசாரித்து வருகிறோம் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.