கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்தது... முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ள நிலையில், மெத்தனாலை விநியோகம் செய்த மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி - தொடரும் உயிர் பலி
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே தெருவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது கருணாபுரம் பகுதியில் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு விஷச்சாராயம் அருந்தியவர்களை பல்வேறு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கியுள்ளார்.
குற்றவாளிகள் அதிரடியாக கைது
விஷச்சாராய வழக்கில் குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். விஷச் சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சிவகுமாரை சென்னை எம்.ஜி,ஆர். நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தவரை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி மாதேஷ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அய்யாசாமி மற்றும் தெய்வாரா என்ற இந்த இரண்டு நபர்கள் மெத்தனாலை ஆந்திரா மற்றும் மாதவரத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வாங்கி பல்வேறு இடங்களுக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்ல உதவியுள்ளனர்.
இந்த மெத்தனால் சின்னத்துரை - ஜோசப் என பலரிடம் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 3 பேரல் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனிடையே விஷச்சாராயம் குடித்து 5 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் இருக்கும் 12 பேருக்கு முழுமையாக கண்பார்வை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
RAIN ALERT : 5 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?