கடந்த 8ம் தேதி புழக்கத்தில் இருந்த பழைய நோட்டுகள் செல்லாது என அறிவித்ததையடுத்து, கடந்த 1௦ம் தேதி முதல் வங்கிகளிலும், 11ம் தேதி முதல் ஏடிஎம்களிலும் புதிய நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.
போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாததாலும், பெரும்பாலான ஏடிஎம் களில் பணம் கிடைக்காததாலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற்று செல்கின்றனர்.
கடந்த 5 நாட்களாகவே மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். மக்கள் நின்றிருந்த வரிசை சாலை வரை நீண்டது.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இந்த விபத்தில், பொது மக்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், கோவையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணபதி மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு ராமசந்திரன் என்பவர் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாக வரிசையில் நின்றதால் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்கள் தங்களின் பணத்திற்கு சரியான சில்லரையும், புதிய நோட்டுகளும் கிடைக்காமல் அவதியுற்று வரும் நிலையில், இது போன்ற உயிரிழப்புகளும், விபத்துகளும் மக்களை மேலும் துயரத்தில் தள்ளியுள்ளது.
