திண்டுக்கல் அருகே உயிருடன் உள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை மாற்றி தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் மாலையுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது கொசவம்பட்டியை சேர்ந்த அதிசயநாதன் என்பவர் கழுத்தில் மாலை அணிந்தபடி , நான் இறந்து விட்டேனா ? இல்லையா ? என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையினை ஏந்தி வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பின்னர் , நடந்த விசாரணையில் அதிசய நாதன் என்ற நபர் கடந்த 2007ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கிராம நிர்வாக அலுவலகம் சான்று வழங்கியுள்ளது. அதை மாற்றித் தரக்கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து , உயிரோடு உள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.