முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறையில் உள்ள டிவியில் செய்திகளை பார்க்கிறார். உடல் நிலை முன்னேற்றத்தால், நாளை மறுநாள் தனிவார்டுக்கு மாற்றப்படுகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை பெண் நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு இடைவிடாது சிகிச்சை அளித்து வருவதால், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டு எழுதிய கடிதம், அ.தி.மு.க.வினருக்கு புது உற்சாகம் அளித்துள்ளது.

அவரது அறிக்கைக்கு பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 56வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் அறையில் இருந்தபடி டிவியில் செய்திகளை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்றும், சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் இயல்பாக பேசுகிறார் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

மேலும், அவரது உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், நாளை மறுநாள், அவரை தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாகவும், அந்த தனிவார்டில் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து அதன்பிறகு ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.