தேங்காய்ப்பட்டிணத்தில், கடல் அலையால் 60 மீட்டர் நீளத்திற்கு சேதம் அடைந்த தூண்டில் வளைவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகப் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி அரையன்தோப்பு, முள்ளூர்துறை, இராமன்துறை ஆகிய கடற்கரை கிராமங்களில் தலா 120 மீட்டர் நீளத்திற்கு கடலில் மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன.
இந்த மூன்று தூண்டில் வளைவுகளிலும் தலா 60 மீட்டர் நீளத்திற்கு கடல் அலையால் சேதம் அடைந்துள்ளன. தூண்டில் வளைவுகளை சீரமைக்க வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் குமரி ஜோர்தான் தலைமையில் அரையன் தோப்பு பகுதியில் சில நாள்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியம், கண்காணிப்பு பொறியாளர் அப்துல் அமீது, கடலரிப்பு கோட்ட செயற்பொறியாளர் கிறிஸ்து நேசகுமார், உதவி செயற் பொறியாளர் வேத அருள் சேகர் ஆகியோர் தூண்டில் வளைவுகள் சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மதுரை தரக்கட்டுப்பாடு செயற்பொறியாளர் டாஸ்சன் பர்ணபாஸ், அதிகாரிகள் தாணுமூர்த்தி, சகாய செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மீனவர் பேரவை தலைவர் குமரி ஜோர்தான், செயலாளர் ஆன்டனி கென்சலின், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலாளர் வில்பிரட் ஆகியோர் மீனவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை அதிகாரிகளிடம் விளக்கி கூறினார்கள்.
அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
