காஞ்சிபுரம்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் வழங்கப்படும் புகார்களில் விசாரணையின்றி கைது செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து காஞ்சிபுரத்தில் தலித் மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழங்கப்படும் புகார்களில் விசாரணை இன்றி கைது செய்யக்கூடாது" என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், வன்கொடுமை சட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு உள்ளதாகக் கூறி தலித் மக்கள் முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருத்தணி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மு.ந. திருநாவுக்கரசு தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினார். 

இதில், "உச்சநீ திமன்றத்தின் தீர்ப்பு அரசியல் அமைப்புக்கு எதிராக அமைந்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மத்திய அரசு விரிவான அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். 

இந்தச் சட்டம் நீர்த்துப் போகாமல் இருக்கவும், பழங்குடி தலித் சமுதாய மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் முன்னணி நிர்வாகிகள் செல்வம், ரமேஷ்பாபு, விஜய்பாரதி, மைக்கெல்ராஜ், பாப்பு உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.