Asianet News TamilAsianet News Tamil

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்;  6-வது நாளில் வாயில் கருப்பு துணி கட்டினர்...

daily wages employees strike for various demands On the 6th day continues
daily wages employees strike for various demands On the 6th day continues
Author
First Published May 10, 2018, 6:35 AM IST


நீலகிரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தினக்கூலி பணியாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தை தொடர்ந்தனர். 

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 4-ஆம் தேதி முதல் தினக்கூலி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"தோட்டக்கலைத் துறை பண்ணை மற்றும் பூங்காக்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், 

இடைக்கால நிவாரணமாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் 6-வது நாளான நேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் புல்வெளியில் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பதாகைகளை கைகளில் ஏந்தி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே தோட்டக்கலைத் துறை சார்பில், ரோஜா பூங்காவில் பணிபுரிய தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டதால் தங்களது வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் தினக்கூலி பணியாளர்கள் சிலர் ரோஜா பூங்காவுக்கு பணிக்கு சென்றனர். 

இந்தப் போராட்டம் குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை தொழிலாளர் சங்க பொது செயலாளர் போஜராஜ், "நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் மாலை நிர்வாகிகளை அழைத்து பேசினார். 

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதாலும், வருடம் முழுவதும் பணியாளர்களுக்கு வேலை இருப்பதாலும் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்த விவரங்கள் தோட்டக்கலைத் துறை செயலாளர், நிதித்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். 

தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெறும். ரோஜா பூங்காவில் ஒருசில தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு திரும்பி உள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios