மத்திய வங்க கடலில் மையம் கொண்டுள்ள டிட்லி புயல், ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கிடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள டிட்லி புயல், தீவிர புயலாக உருவெடுத்து, ஒடிசாவில் உள்ள கோபல்பூரில் இருந்து தென் கிழக்கே 370 கி.மீ., தொலைவில் உள்ளது. அது மேலும் வலுவடைந்து, ஒடிசாவின் கோபல்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கபட்டினம் இடையே, நாளை காலை கரையை கடக்கும். ஒடிசாவை தாக்கியதும் அந்த புயல் மீண்டும் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காளம் நோக்கிச் செல்லும். அதன் பிறகு ஒடிசா கடற்கரை பகுதியில் படிப்படியாக வலு இழக்கும் என கூறியுள்ளார். 

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 100 முதல் 125 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக பலத்த மழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் அரபிக்கடலில், லூபன் புயல் ஓமனை நோக்கி, வட மேற்கு திசையில் நகர கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சின்ன கல்லாரில், 10 செ.மீ., மற்றும் வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.