Asianet News TamilAsianet News Tamil

அதிகளவில் கருங்கற்களை வெட்டி எடுப்பதால் ஏற்படும் நில அதிர்வு…

cut granite-increasingly-taking-the-seismic
Author
First Published Dec 17, 2016, 10:45 AM IST


சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் தண்டிக் கரட்டில் இரவு- பகலாக கருங்கற்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பொட்டணம் ஊராட்சி. அந்த ஊராட்சியில் நைனாமலைக்கு செல்லும் சாலையில் சுமார் 1000 அடி உயரத்தில் தண்டிக்கரடு (குன்று) உள்ளது.

இந்த கரட்டில் இயற்கையாகவே கருங்கற்கள் உள்ளதால் அதனை பல ஆண்டுகாலமாக வெட்டி எடுத்து செல்கின்றனர். முன்பு மிக குறைந்த அளவே வெட்டி எடுக்கப்பட்டு வந்த அந்த கரட்டில் தற்போது அரசு அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

பொட்டணம் ஊராட்சியை சுற்றி உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட கிரஷர்கள் நாள்தோறும் இரவு, பகலாக அந்த கரட்டை குடைந்து கருங்கற்களை எடுத்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், லாரிகள் மூலமாக சுமார் 500 யூனிட்டுக்கு மேல் கருங்கற்களை கொண்டு செல்கின்றனர். தற்போது ஒரு யூனிட் கருங்கற்கள் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அந்த கரட்டு பகுதியில் வெடி வைத்து கற்களை வெட்டி எடுப்பதால் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் சிறிதளவு நிலஅதிர்வு ஏற்படுவதாகவும், கற்கள் வெட்டப்படுவதால் சத்தம் கேட்டு வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் மழை பெய்யும் போது அந்த மலையில் இருந்து வடியும் நீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயனடையும் விதத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த கரட்டின் அடிவார பகுதியிலும் சுமார் 50 அடி வரை கற்களை தோண்டி எடுத்திருப்பதால் அந்த கரட்டின் ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கரட்டில் மரங்கள், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த கரட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து கருங்கற்களை முறையாக வெட்டி எடுத்து செல்ல எடை அளவு நிர்ணயம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios