வேலூர்

வேலூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற கொடூர தாய் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். தொப்புள் கொடிக்கு துணிகள் காயப்போடும் கிளிப் போடப்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை பேருந்து நிறுத்தம் அருகே குடியாத்தம் - காட்பாடி சாலையில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சரோஜா.

நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவிந்தராஜ் வீட்டின் அருகே நீண்ட நேரமாக குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து கணவன் - மனைவி இருவரும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கும் பகுதியை நோக்கி சென்றனர்.

அந்த இடத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தேக்கு மர இலையில் வைத்தபடி துணியில்லாமல் தரையில் கிடந்தது. கடும் குளிரால் பச்சிளங்குழந்தை நடுங்கியபடி இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் குழந்தையை மீட்டு தங்கள் வீட்டுக்கு கொண்டுச் சென்றனர். பின்னர், இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் மற்றும் காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் காவலாளர்கள், குழந்தையை மீட்டு அவசர ஊர்தி மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ அலுவலர் அமுதாமணி, குழந்தைகள் நல மருத்துவர் மாறன்பாபு ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை நள்ளிரவில் பிறந்துள்ளதாகவும், 2 கிலோ 350 கிராம் எடை இருப்பதாகவும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தால் தொப்புள்கொடிக்கு கிளிப் போடப்படும். ஆனால், கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தைக்கு தொப்புள்கொடியில் துணிகள் காயப்போடும் கிளிப் போடப்பட்டிருந்தது. எனவே, யாரோ பெற்ற குழந்தையை அனாதையாக போட்டுச்சென்றுள்ளனர்.

பிறந்த குழந்தையை இரக்கமின்றி போட்டுவிட்டு சென்ற தாய் யார்? என்பது குறித்து குடியாத்தம் நகர காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.