புதுக்கோட்டை, ஆலங்குடியில் பெரியார் சிலை உடைத்த விவகாரத்தில் சி.ஆர்.பி.எஃப். சேர்ந்த தலைமை காவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் சிலையை உடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரியார் சிலை உடைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பெரியார் சிலை உடைத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில், ஆலங்குடி அருகில் உள்ள விடுதி ஒன்றில் செந்தில் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒரு தலைமைக் காவலர் என்பதும் சத்தீஸ்கர் மாநிலம் சி.ஆர்.பி.எஃப். ல் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, குடிபோதையில் இந்த காரியத்தை செய்ததாக கூறியுள்ளார். பெரியார் சிலையை தான் மட்டுமே உடைத்ததாகவும், வேறு யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். குடிபோதையில் இந்த காரியத்தை செய்ததாகவும் வேறு உள்நோக்கம் வைத்து செய்யவில்லை என்றும் போலீசாரிடம் செந்தில் குமார் கூறியுள்ளார். 

சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து சிறிது தூரத்தில், டாஸ்மாக் கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில், சம்பம் நடந்த அன்று இரவு செந்தில் குமார், மதுபானம் வாங்கியது பதிவாகியுள்ளது. சந்தேகத்தின்பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரிக்கவே, உண்மை வெளிவந்துள்ளது.