Asianet News TamilAsianet News Tamil

கடும் வறட்சியால் பயிர்கள் பாதிப்பு; பெரும் நட்டத்தால் விவசாயிகள் கவலை...

crops affected by severe drought Farmers worry about big loss ...
crops affected by severe drought Farmers worry about big loss ...
Author
First Published Apr 17, 2018, 9:43 AM IST


திருவாரூர்
 
திருவாரூரில் உள்ள பெருகவாழ்ந்தான் பகுதியில் கடும் வறட்சி காரணமாக பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

சம்பா சாகுபடியிலும் எதிர்பார்த்த அளவு மகசூல் இல்லாததால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர். நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் பகுதியில் விவசாயிகள் உளுந்து, எள், பயறு, கடலை, பருத்தி பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

பெருகவாழ்ந்தான், சேந்தமங்கலம், ஆலாத்தூர், இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், பனையூர், தோட்டம், ஓவர்சேரி, புழுதிக்குடி, திருவண்டுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 400 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பெருகவாழ்ந்தான் பகுதியில் தற்போது கடும் வறட்சி, கோடை வெயிலும் சுட்டெரித்து வருவதால் பருத்தி பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள், "காவிரி நதி நீர் பிரச்சனையால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. பெருகவாழ்ந்தான் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை செய்து வருகிறோம். 

பருத்தி பயிருக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது என்பதால் கோடை காலத்தில் பருத்தியை சாகுபடி செய்கிறோம். 120 நாட்களில் இருந்து 140 நாட்களுக்குள் பருத்தியை அறுவடை செய்யலாம். 

ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த ஆண்டு நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பருத்தி பயிரில் போதிய அளவு வளர்ச்சி இல்லை. இதனால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

நெல் சாகுபடி பலனளிக்காத நிலையில் பருத்தி சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையில் வழங்கவும், இடுபொருட்களை இலவசமாக வழங்கவும் வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வருத்தத்தோடு தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios