திருநெல்வேலி

வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று தென்காசி தொகுதி காங்கிரசு செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரசு செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், ராம்மோகன், முன்னாள் வட்டாரத் தலைவர் செல்வராஜ், மாநிலப் பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, ஜி.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி நகரத் தலைவர் காதர் மைதீன் வரவேற்றுப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உறுப்பினர் சேர்க்கை மேற்பார்வையாளர் பாலையா பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், “உறுப்பினர் சேர்ப்புப் பணியைத் துரிதப்படுத்தி தலைமைக் கொடுத்துள்ள கால அவகாசத்திற்கு முன்பு நிறைவு செய்வது,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வழங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள ரூ.1000 பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,

வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வெள்ளதுரை, மகளிர் அணி மாவட்டத் தலைவி நாகம்மாள், காங்கிரசு பொன்பாண்டியன், குற்றாலம் பெருமாள், காஜா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.