Crocodile trapped by Forest Department people and tourists happy

தருமபுரி

ஒகேனக்கல் ஊட்டமலையில் உள்ள காவிரி ஆற்றில் இருந்த முதலை பிடிபட்டதால் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் ஊட்டமலையில் உள்ள காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட வன அலுவலர் திருமால், முதலைகள் நடமாட்டம் இருந்தால் அவற்றை பிடிக்குமாறு உத்தரவிட்டார். உடனே, வனத்துறையினரும் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதா? என்று தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வன அலுவலர் கேசவன், வனவர் காளியப்பன் மற்றும் வனத்துறையினர் ஊட்டமலை காவிரி ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 7 அடி நீளமுள்ள பெண் முதலை ஒன்று கரையின் ஓரத்தில் படுத்திருந்தது. பின்னர், அந்த முதலையை வலைபோட்டு லாவகமாக வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து அந்த முதலை ஒகேனக்கல்லில் உள்ள முதலை பண்ணையில் விடப்பட்டது.

ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றி திரிந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் சற்றே அமைதி அடைந்தனர். மேலும், அந்தப் பகுதியில் முதலைகள் உள்ளதா? எனவும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.