காவேரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம். அந்த கொள்ளிடம் ஆறு திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து பிரிந்து திருச்சி, கல்லணை, கும்பகோணம், திருமானூர், சீர்காழி வழியாக பழையாறு என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்று நீர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய நான்கு மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரை தேக்கி வைக்க சரியான ஏற்பாடுகள் இல்லாததால், அதிகமான நீர் தேவை இல்லாமல் கடலில் கலந்து வீணாகி விடுகிறது.

அதனால், மழை குறைவான காலங்களில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்று, கடந்த 2014 ம் ஆண்டு, சட்டசபையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 6 டி.எம்.சி நீரை தேக்கி வைப்பதற்கு வசதியாக, கடந்த  ரூ.400 கோடி மதிப்பீட்டில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அந்த திட்டத்தை அமைச்சர்களும் மறந்து விட்டனர் என்று டெல்டா மாவட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள இடம் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், அங்கே மணல் அள்ளும் தொழில் ஜரூராக நடைபெற்று வருகிறது.

அதனால், அங்கே தடுப்பணை கட்டும் திட்டம் தள்ளி போடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாகை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமது தொகுதிக்கு உட்பட்ட வேதாரண்யம் பகுதியில் மட்டும் அனைத்து திட்டங்களையும் செயல் படுத்தி வருவதோடு, கொள்ளிடம்  தடுப்பணை திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

கொள்ளிடம் தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினை மட்டுமல்ல பாசன நீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். 

ஆனால், மணல் அள்ளுபவர்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா அறிவித்து, மூன்றாண்டுகள் கடந்தும், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரே, விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்று மக்கள் சபிக்க தொடங்கி உள்ளனர்.