கோவையில் அரசு நிலத்தை அபகரித்த அதிமுக, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள்.! கைது செய்ய நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம்
தமிழ்நாடு முழுவதும் அரசியல் செல்வாக்கு, அதிகாரம், பண பலம் படைத்தவர்கள் சட்டவிரோதமாக அரசு நிலங்களை அபகரித்திருந்தால் அந்நிலங்களை மீட்டெடுக்கவும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

அரசு நிலம் அபகரிப்பு
கோவையில் அரசு நிலத்தை அதிமுக மற்றும் பாஜகவினர் அபகரித்ததாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், கோவையில் ரூபாய் 230 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அரசியல் செல்வாக்கு, பண பலம் படைத்த சிலர் அபகரித்து கட்டிடம் எழுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அபகரிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நில அபகரிப்பு நடந்துள்ள விதம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல அரசியல் மற்றும் பண பலம் படைத்தவர்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து ஏராளமாக பணம் சம்பாதித்துள்ளதை நீதிமன்றம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்
நிலங்களின் சந்தை மதிப்பு பெருமளவு உயர்ந்துள்ள நிலையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் படைத்தவர்கள் சில அரசு அதிகாரிகளின் துணையோடு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்து கட்டிடம் எழுப்புவது, அவர்களின் பெயர்களில் பட்டா மாற்றம் செய்வது குறித்த வழக்குகள் கடந்த சில தினங்களாக நீதிமன்றங்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து வந்துள்ளது.
கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை காலி செய்ய வேண்டுமென நீதிமன்ற தீர்ப்புகளைக் காட்டி இடித்து வேகமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதே சமயம், பண பலம், அதிகார பலம், அரசியல் பலமிக்கவர்கள் சட்டவிரோதமாக பல்வேறு கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதையும், அவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளதையும் அரசு அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல.
கைது செய்திடுக- சிபிஎம்
எனவே, கோவை நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அரசியல் செல்வாக்கு, அதிகாரம், பண பலம் படைத்தவர்கள் சட்டவிரோதமாக அரசு நிலங்களை அபகரித்திருந்தால் அந்நிலங்களை மீட்டெடுக்கவும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்