Court order to demolish the temple

சென்னை ரிசர்வ் வங்கிக்கு எதிரில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில், கோட்டை பாளையத்தமன் கோயில் உள்ளது. பொதுப்பணி துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்ன மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாச்சியரும் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதனை எதிர்த்து கோயில் பூசாரி அப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டி 50 ஆண்டுகளாக பராமரித்து வரும் கோயிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்துக்கு தெரிவித்த பிறகே காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பூசாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பக்தர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயிலைக் கட்டமாட்டார்கள். இடிக்கப்படும எனத் தெரிந்தே கோயில் கட்டமாட்டார்கள். சுயநலனுக்காக ஆக்கிரமிப்பு கோயில்கள் கட்டப்படுகின்றன. மேலும், தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கேட்பதில்லை எனக் கூறி, அந்த கோயிலை இடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.