மதுரை,
சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக அளித்த புகாருக்கு தூத்துக்குடி ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ராஜய்யா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “வைப்பாறு ஆற்றுப்படுகையில் வி.வேடப்பட்டி அருகே சுப்பிரமணியன் என்பவர் சட்ட விரோதமாக மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஏராளமான மணல் அள்ளப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரித்தபோது விளாத்திகுளம் தாலுகாவில் மணல் குவாரி நடத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது வி.வேடப்பட்டியில் கிராவல் மண் எடுப்பதற்கு தான் சுப்பிரமணியனுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த உரிமத்தை வைத்துக்கொண்டு அவர் வைப்பாற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்து வருகிறார். இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, கிராவல் மண் எடுக்க வழங்கிய உரிமத்தை இரத்து செய்யக்கோரி தூத்துக்குடி ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே கிராவல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வைப்பாறு நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
